Skip to main content

ஈரோட்டில் வயதானவர்களைக் குறிவைக்கும் கரோனா!!  

Published on 29/08/2020 | Edited on 29/08/2020

 

Corona targeting the elderly in Erode !!

 

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக கரோனா வைரஸ் தாக்கம் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

குறிப்பாக ஈரோடு நகர் பகுதியைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முதலில் சென்னை உட்பட பிற மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் மூலம் ஈரோட்டில் வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியது. தற்போது ஈரோடு மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து தொழில் நிமித்தமாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.

அதே போல் ஈரோட்டை பொருத்தவரை வயதானவர்களையே அதிக அளவு இந்த வைரஸ் தொற்றி வருகிறது. இதனால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியலில் ஈரோட்டில் மேலும் 126 பேருக்கு வைரஸ் உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 2,735 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 57 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு சென்றனர். இதன்மூலம் மொத்தம் 1,483 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

தற்போது 1,214 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று வரை மொத்தம் 38 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மிஷன் ஜீரோ திட்டத்தின் மூலம் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலமும்  காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.எனினும் வைரஸ் தொற்று குறைந்தபாடில்லை.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட பொது சுகாதார துறை இணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறும்போது , "ஈரோடு மாவட்டத்தில் இப்போது வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறோம். ஈரோடு மாவட்டத்தில் தற்போது வரை வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் தான். வயது முதிர்வு காரணமாக அவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது.

 

Ad

 

மேலும் அவர்கள் பல்வேறு நோய்களாலும் அவதிப்பட்டு வருகின்றனர். எங்களைப் பொறுத்தவரை எண்ணிக்கையைக் காட்டிலும் மரணம் ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வைரஸால் பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்தால் வைரஸை கட்டுப்படுத்தலாம் இதற்காக  எங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்." என்றார்.


இந்த நிலையில் இதுவரை என்றுமே இல்லாத அளவில் ஒரே நாளில் (29.08.20) இன்று மட்டும் 156 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை மொத்தம் 1,315 பேர் ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்