திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை மணிகண்டம் ஒன்றியப் பெருந்தலைவர் மாத்தூர் கருப்பையா துவக்கி வைத்தார். ஜல்லிக்கட்டுப் போட்டியில் 300 மாடுகள் அனுமதிக்கபட்டன. மேலும் இப்போட்டியில் கலந்து கொள்ள வந்த 400 வீரர்களில் 150 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, சுழற்சி முறையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் கரோனா விதிமுறைகள் மீறப்பட்டதாக 5 பேர் மீது ராம்ஜி நகர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதில் நவலூர் குட்டப்பட்டு பஞ்சாயத்து தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், கிராமத் தலைவர்கள் ராஜதுரை, தேவராஜ், ஒன்றியக் கவுன்சிலர் சண்முகம் மற்றும் டேவிட் ராஜேந்திரன் ஆகிய 5 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.