சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மருத்துவத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், "சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட இன்று 40% அதிகரித்துள்ளது.
ஈரோடு கரு முட்டை விவகாரத்தில் அறிக்கை கிடைத்தவுடன் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். கரு முட்டை விவகாரத்தில் விசாரணை குழு அறிக்கையின் படி தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். கரு முட்டை விற்பனை குற்றத்திற்கான அபராதத் தொகை 5 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. வருகிற ஜூன் 12- ஆம் தேதி அன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. கூட்டம் கூடுவதைத் தயவு செய்து தவிர்க்க வேண்டும். மூன்று நாட்களாக சாதாரண காய்ச்சல், சளி இருந்தால் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.