தமிழகத்தில் நேற்று (13.04.2021) ஒரே நாளில் 6,984 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 2,482 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 2,000க்கும் அதிகமான கரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது. பிற மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. நேற்றைய பாதிப்புகளைச் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 9,47,129 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டை, அண்ணாநகரில் 2000-ஐ தாண்டியது கரோனா பாதிப்பு. சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் 2 ஆயிரத்தையும், 7 மண்டலங்களில் ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் 2,109 பேருக்கும்; அண்ணாநகர் - 2,037; தண்டையார்பேட்டை - 1,260; ராயபுரம் - 1,698; திருவிக நகர் - 1,529; அம்பத்தூர் - 1,314; கோடம்பாக்கம் - 1,708; வளசரவாக்கம் - 1,036; அடையாறு - 1,155; திருவொற்றியூர் - 462; மணலி - 194; மாதவரம் - 716; ஆலந்தூர் - 849; பெருங்குடி - 929; சோழிங்கநல்லூர் - 443. அதேபோல் மதுரையில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை போரூரில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''தமிழகத்தில் கரோனா பாதிப்பு ஏறுமுகமாக உள்ளது. கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க 81 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளன. தமிழகத்தில் மாஸ்க் போடாத 2.39 லட்சம் பேரிடம் இதுவரை 5.7 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது'' என்றார்.