புதுச்சேரி கோரிமேடு - தன்வந்திரி காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து காவல் நிலைய ஆய்வாளர் உட்பட காவல் நிலையத்தில் இருந்த 12 பேரை தனிமைப்படுத்தப்பட்டனர்.
புதுச்சேரி சுப்பையா நகர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரை கடந்த 7-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த முகமதுகிலால், சதீஷ் மற்றொரு சதீஷ் உள்பட 4 பேர் முன்விரோதம் காரணமாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மூர்த்தி தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் அந்த 3 பேர் உள்பட சிலர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து முகமது கில்லால், சதீஷ், மற்றொரு சதீஷ், விக்னேஷ் உள்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குப் பரிசோதனை செய்ததில் கைது செய்யப்பட்ட 5 பேரில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவருடன் இருந்த 5 பேரையும் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து கோரிமேடு தன்வந்திரி காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளைக் கைது செய்த போலீசார் மற்றும் காவல் நிலையத்தில் இருந்த காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், தலைமைக்காவலர் உள்ளிட்ட அந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றும் 12 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, அனைவரும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் கரோனா குற்றவாளியைக் கைது செய்த போலீசார் தற்போது கலக்கத்தில் உள்ளனர்.