தமிழகத்தில் சில நாட்களாகவே கரோனா பாதிப்பு என்பது மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தஞ்சையில் 16 பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட 250க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நேற்று சென்னை கிண்டி மத்திய தொழிற் பயிற்சி மையத்தில் 54 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 300 படுக்கைகளை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''கரோனா பாதித்தவர்கள் நேரடியாக மருத்துவமனையில் வந்து சேர்வதால் தரம் பிரிக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 300 படுக்கைகளை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறோம். தஞ்சையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டாலும் கரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. மதம், கலாச்சாரம், அரசியல் கூட்டங்களால் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது'' என்றார்.