தமிழகத்தில் இன்று மேலும் 5,791 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,280 ஆக பதிவாகியுள்ளது. இதனால் சென்னையில் 4 வது நாளாக 1000 க்கும் மேலாக கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,63,423 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில், ஒரே நாளில் 94,200 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த சென்னை கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்ததை அடுத்து கடந்த மே 5 ஆம் தேதி சென்னையில் மிகப் பெரிய மார்க்கெட்டான கோயம்பேடு மொத்த விற்பனை காய்கறி அங்காடி மூடப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை சந்தை மீண்டும் திறக்கப்பட்டது.
முதன்மை திட்ட அலுவலர் கோவிந்தராஜன் மற்றும் தலைமை திட்ட அலுவலர் பெரியசாமி ஆகியோர் ரிப்பன் வெட்டி கோயம்பேடு மார்க்கெட்டை திறந்து வைத்தனர். வியாபாரிகள் உற்சாகத்துடன் தனிமனித இடைவெளி பின்பற்றாமல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதேபோல் கரோனா மீண்டும் பரவாமலிருக்க மூடப்பட்டிருந்த காய்கறி சந்தை முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இரவு 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 198 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தூய்மை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வெள்ளிக்கிழமை தோறும் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களை அடையாளம் காணும் வகையில் நிர்வாகத்தால் சிறப்பு உடையும் வழங்கப்பட்டுள்ளது.
21 நாட்களுக்கு பிறகு கடந்த 4 நாட்களான சென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கை 1000க்கும் மேல் பதிவாகி வரும் நிலையில் இதற்கு காரணம் தளர்வுகள்தான் என்ற கருத்து நிலவும் நிலையில் தற்பொழுது கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.