சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோய் தொற்று கண்டறியும் RT-PCR கருவியின் சோதனை ஓட்டத்தினை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன், சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மகாஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பேசுகையில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடலூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக கடந்த நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இம்மருத்துவமனை கடலூர் மாவட்ட கரோனா மருத்துவமனையாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.
இதுவரை கரோனா நோய் தொற்று கண்டறியும் வசதியானது விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தான் உள்ளது. அதனால் முடிவுகள் வருவது 2 ல் இருந்து மூன்று நாட்கள் ஆகின்றது. ஆதலால் இம்மருத்துவ மனைக்கு எனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 32 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் கரோனா நோய் கண்டறியும் RT-PCR வைரல் டெஸ்டிங் மெஷின் வாங்கிட நிதி ஒதுக்கப்பட்டு தற்போது இக்கருவியானது நிறுவப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு நாட்களுக்குள் ஐ.சி.எம்.ஆர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்) அனுமதி சான்று கிடைத்தவுடன் சிதம்பரத்திலேயே நோய் தொற்று கண்டறியும் வசதி ஏற்படும். அதன் மூலம் டெஸ்ட் எடுக்கப்பட்டவுடன் குறைந்தபட்சம் 6 மணி நேரத்தில் இருந்து அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் முடிவுகள் தெரியவரும்.
தற்போது இக்கருவியின் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகின்றது. கரோனா நோய் கண்டறியும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள இரண்டு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ பணியாளர்கள் குழு சென்னையில் பயிற்சி பெற்று வந்துள்ளனர். இம்மருத்துவ கல்லூரி மருத்துவமனை கரோனா மாவட்ட மருத்துவமனையாக அறிவிக்கப்பட்ட பின்பு மாவட்டம் முழுவதிலும் இருந்து இதுவரை 282 பேருக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இதில் 73 பேர் உள்நோயாளிகள் பிரிவு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 38 பேருக்கு நோய் தொற்று இல்லை என்றவுடன் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
20 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட பின்பு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இவர்களில் 5 பேர் பூரண குணமடைந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையிலிருந்து அவரவர்கள் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். விரைவில் இவர்களும் குணமடைந்து வீடு திரும்புவார்கள். இம் மருத்துவமனையில் தற்போது முதல்கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 14 பேர் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. முடிவுகள் கிடைக்கபட்டவுடன் விரைவில் வீடு திரும்புவார்கள் என்றார்.
ஆய்வின்போது அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் கிருஷ்ணமோகன், துணைவேந்தரின் ஆலோசகர் மருத்துவர் சிதம்பரம், மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜ்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் சண்முகம், வட்டாட்சியர்கள் ஹரிதாஸ்,பலராமன், அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் தேவேந்திரன், உதவி காவல் ஆய்வாளர் கணபதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.