உலக அளவில் இந்தியாவும், மாநில அளவில் தமிழகமும் கரோனா பாதிப்பில் முதலிடத்தை நோக்கி விரைந்துகொண்டிருக்கும் நிலையில், மத்திய மாநில அரசுகள் போட்டிபோட்டுக்கொண்டு பெரும் தளர்வை உருவாக்கி, பொதுமக்களின் உயிரோடு விளையாடி வருகின்றன.
இதில் தமிழகத்தின் நிலை படுமோசம்!!!
7-ந் தேதி நிலவரப்படி தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,69,256 என்கிறது கரோனா கணக்கில் வீக்கான தமிழக அரசு. அதேபோல் கரோனாவால் ஏறத்தாழ 8 ஆயிரம் பேர்வரை உயிரிழந்திருக்கிறார்கள் என்கிறது அது. இந்த கணக்கிலும் உண்மைக்கு மாறாக கஞ்சத்தனத்தைத்தான் தொடர்ந்து காட்டிவருகிறார்கள்.
கட்டுப்பாடுகள் இருந்தபோது பரவிய வேகத்தை விட, கட்டுப்பாட்டை முழுதாக கைவிட்ட பிறகு தொற்று குறைவாக பரவுவதாக லாஜிக் இல்லாமல் கதை புனைந்துவருகிறார்கள். இது தொடர்பான சென்னையில் கரோனா மீட்பு நடவடிக்கையில் களப்பணி செய்துவரும் அதிகாரி ஒருவரிடம் நாம் கேட்டபோது, “கரோனாவை ஒழிக்க, கரோனா பரிசோதனையைக் குறைக்கும் டெக்னிக்கை கடைபிடிக்க சொல்கிறார்கள். இதன்படி சென்னையில் மட்டும் 60 சதவீத பரிசோதனை குறைக்கப்பட்டுவிட்டது. அதேபோல் கரோனா தொற்றுக்கு ஆளான சென்னைவாசிகளின் எண்ணிக்கையையும் இன்னும் ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டவிடாமல்தான் கவனமாக இருக்கிறோம்.
இதேபோல் கரோனா மரண எண்ணிக்கையைக் குறைக்க, கரோனாவால் இறந்தவர்களை வேறு நோய்களால் இறந்ததாக காட்டச் சொல்கிறார்கள். மனசாட்சியை ஓரம் கட்டி வைத்துவிட்டு இப்படியும் செய்துவருகிறோம்” என்றார் மெதுவாக.
‘இது ஆபத்தை அதிகப்படுத்தாதா’ என்றோம் அவரிடமே. அவரோ, “இப்பவே அதிகமான ஆபத்தில் தானே இருக்கிறோம்” என்கிறார் திகிலூட்டும் குரலில்.
-நக்கீரன் நிருபர் டீம்