தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு இன்று (30/12/2021) மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "சென்னையில் டிசம்பர் முதல் வாரம் 1,088 ஆக இருந்த பாதிப்பு டிசம்பர் நான்காவது வாரத்தில் 1,720 ஆக அதிகரித்துள்ளது. எனவே, சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். மேலும், தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சென்னையில் கரோனா பரிசோதனை, தடுப்பூசிப் போடுவதை அதிகரிக்க வேண்டும். தொற்று பாதிப்புள்ள பகுதிகளைத் தனிமைப்படுத்தி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது, "சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். ஒவ்வொரு மண்டலத்திலும் காவல்துறையுடன் இணைந்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும். விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.