கரோனா என்ற உயிர் கொல்லி கிருமி வௌவால்கள் மூலமே உற்பத்தியாகி சீனாவில் உள்ள உகான் நகரில் தொடங்கி இன்று 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் உயிர்பலி வாங்கி வருகிறது. கண்ணுக்குத் தெரியாத இந்த கிருமியை அழிக்க எந்த மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் கரோனா கிருமி தாக்கத்தை குறைத்து தற்காத்துக் கொள்ளலாம் என்று சித்த மருத்துவர்கள் கபசுரக்குடிநீர், வாதசுரக்குடிநீர், நிலவேம்பு குடிநீரை வழங்க பரிந்துரை செய்திருந்தனர். ஆனால் தமிழகத்தில் கபசுரக்குடிநீர் பொடிகள் இருப்பு இருந்தும் அரசு மருத்துவமனைகளுக்கு ஏனோ இன்னும் வழங்கப்படவில்லை. அதனால் தற்காப்புக்காக என்று தனியார் மருந்துக்கடைகளில் மக்கள் வாங்கிச் செல்கின்றனர். அந்த தயாரிப்புகள் உண்மையானதா? நல்ல மருந்துகளா என்று கூட தமிழக அரசோ, சுகாதாரத்துறையோ ஏதும் சொல்லவில்லை.
இந்தநிலையில்தான், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நேற்று (செவ்வாய் கிழமை) வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் வாழும் வௌவால்களை பிடித்து மாதிரிகள் எடுத்து சோதனை செய்தபோது அதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வாழும் வௌவால்களில் கரோனா கிருமி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைதான் பல கிராம மக்களையும் மீண்டும் அச்சப்பட வைத்துள்ளது. அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு, நெடுவாசல், மறமடக்கி உள்ளிட்ட பல கிராமங்களில் பல நூறு ஆண்டுகளாக பல ஆயிரம் வௌவால்கள் ஆலமரக் கூட்டங்களில் தங்கி உள்ளது. கஜா புயல் நேரத்தில் வௌவால்களின் வாழ்விடங்களாக இருந்த மரங்கள் உடைந்தபோதும் கூட மொட்ட மரங்களில் தொங்கியது. அந்த நேரத்தில் உணவுக்காக தவித்த வௌவால்களுக்கு பழங்களை கொடுத்தார்கள் கிராம மக்கள். வெடி வெடித்தால் ஓடிவிடுமே என்று வெடி வெப்பதையே தவிர்த்து வந்தனர். இயற்கையாக அமைந்த வௌவால்களின் சரணாலயமாக இது இருந்தது. தமிழ்நாட்டில் இப்போது பறவை இனங்களில் அதிகம் வாழ்வது வௌவால்கள் மட்டும்தான்.
அப்படியான வௌவால்களுக்கு தற்போது கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்றால், எங்கள் கிராமங்களில் பல நூறு வருடங்களாக உள்ள வௌவால்களுக்கும் இருக்குமா? அப்படியானால் எங்கள் கிராம மக்களுக்கு அந்த தொற்று பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். அதற்கு தக்க நடவடிக்கை எடுத்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று பல கிராம இளைஞர்களும் கோரிக்கை எழுப்பி உள்ளனர். இளைஞர்களின் நியாயமான கோரிக்கையை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஏற்று அவர்களுக்கு விளக்கினால் அச்சத்தை போக்கலாம்.