கடந்த செப்.1 ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறந்து வகுப்புகள் தொடங்கியுள்ளது. அரசு வழிகாட்டு நெறிமுறைகளோடு மாணவர்கள் தினசரி பரிசோதனைகளுக்கு பிறகே வகுப்புகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனாலும் ஆங்காங்கே மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆலங்குடி அருகில் உள்ள முள்ளங்குறிச்சி அரசுப் பள்ளி மாணவி ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், உடனடியாக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். அன்றே மற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து நேற்று சோதனை முடிவு வந்த நிலையில் வேறு யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்ததால் இன்று முதல் பள்ளி திறக்கப்பட்டது.
இதேபோல அறந்தாங்கியில் ஒரு மாணவிக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் தெற்கு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்குத் தொற்று உறுதியான நிலையில் மாணவர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு சக மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் கீரமங்கலம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தின் சார்பில் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல புதுக்கோட்டை அரசு மகளிர் பள்ளி மாணவி ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த மாணவி பள்ளிக்கு வராததால் சக மாணவிகளும் ஆசிரியர்களும் அச்சமின்றி உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 4 மாணவ, மாணவிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.