Skip to main content

என்ன செய்கிறார்கள் குன்ஹாவும் குமாரசாமியும்?

Published on 28/09/2017 | Edited on 28/09/2017
என்ன செய்கிறார்கள் குன்ஹாவும் குமாரசாமியும்?



‘உங்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது. தீர்ப்பை அறிவிக்கும்வரையில் பக்கத்தில் உள்ள அறையில் அமர்ந்திருங்கள்’ - 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே நாளில் சொத்துக் குவிப்பு வழக்கின் தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அறிவித்தபோது, மனதளவில் நொறுங்கிப் போனார் ஜெயலலிதா. ஒரு மாநில முதல்வரின் அத்தனை அதிகாரங்களையும் ஒடுக்கி, அவரைக் குற்றவாளி என அறிவித்தார் குன்ஹா. ஜெயலலிதாவைப் போலவே, இந்தத் தீர்ப்பால் அ.தி.மு.க தொண்டர்களும்  நிலைகுலைந்தார்கள். 'காவிரியை வைத்துக்கொள்; அம்மாவை விடுதலை செய்' என்ற முழக்கங்களும் பதவியேற்பில் கதறியழுது கொண்டே அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டதும் அடுத்தடுத்த நாள்களில் அரங்கேறின.

தினம் தினம் திருநாளே! தினப் பலன் செப்டம்பர் - 24-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன் அகில இந்திய அளவில் தலைப்புச் செய்தியாக மாறிப் போனார் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா. 22 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு மக்கள் வெள்ளத்தில் நீந்தியவாறே போயஸ் கார்டனுக்குள் நுழைந்த ஜெயலலிதா, நீண்டநாள்களாக வெளியுலகைப் பார்க்காமல் முடங்கிக் கிடந்தார். 

கார்டன் கதவுகள் யாருக்காகவும் திறக்கப்படவில்லை. அவரது மனதையும் உடலையும் ஒருசேர பாதித்த நிகழ்வாக நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துவிட்டது. தீர்ப்பு வெளிவந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது ஜெயலலிதாவும் இல்லை. அவர் அரும்பாடுபட்டு வளர்த்த இரட்டை இலையும் இல்லை. கார்டன் ரகசியங்களைப்போல, அவரது மரணமும் மர்மமாகவே முடிந்துவிட்டது. 2014 செப்டம்பர் 27 அன்று வரலாற்றுத் தீர்ப்பு எழுதிய மைக்கேல் டி குன்ஹா, எந்தவித அவசரமும் இல்லாமல் சட்டப் பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார். என்ன செய்து கொண்டிருக்கிறார் மைக்கேன் குன்ஹா? 

" கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக, தனது அரசாங்கப் பணியை கவனித்துக்கொண்டு வருகிறார் குன்ஹா. அண்மையில், அவருடைய நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்ட விழாவில், ‘ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு பற்றி நினைத்துப் பார்த்தது உண்டா?’ என ஒருவர் கேள்வி எழுப்பியபோது, 'நான் ஓர் அரசாங்க ஊழியன். சட்டம் என்ன சொன்னதோ அதை மட்டுமே செய்தேன். மற்ற வழக்குகளைப் போலவேதான் அந்த வழக்கையும் பார்த்தேன். தீர்ப்பு வழங்கியதோடு என்னுடைய பணி முடிந்துவிட்டது. எந்தவித தனிப்பட்ட விருப்பு வெறுப்பையும் அந்த வழக்கில் நான் காட்டவில்லை' என இயல்பாகப் பேசியிருக்கிறார். 'இதுதான் குன்ஹாவின் வழக்கம்' என்கிறார்கள் அவருடைய நண்பர்கள். எவ்வளவு பெரிய தீர்ப்பு வழங்கினாலும், அதைப் பற்றி பெருமிதம் கொள்ளாமல் அடுத்த வழக்கை கவனிக்கச் சென்றுவிடுவார். புத்தகம் வாசிக்கும் வழக்கம் உள்ள குன்ஹா, நீதிமன்றப் பணியில் இருந்து ஓய்வுபெற இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன. 'ஓய்வுக்குப் பிறகு புத்தகம் எழுதும் முடிவில் இருக்கிறார். அதில், அவரது நீதிமன்ற வாழ்க்கை குறித்த அரிய தகவல்களை விவரிக்க இருக்கிறார்' என்கின்றனர். 

இதே சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமியையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.    கார்டனை விட்டு ஜெயலலிதா வெளியில் வர இந்தத் தீர்ப்பு ஒரு காரணமாக அமைந்தது. அதேநேரம், 'குமாரசாமி கால்குலேட்டர்' என விமர்சிக்கும் அளவுக்குக் கெட்ட பெயர் சம்பாதித்தார். கார்டன் சொத்துகளைப் பட்டியலிடுவதில் ஏற்பட்ட 'அரித்மெட்டிக் எர்ரர்' நீதித்துறை வட்டாரத்தை கதிகலக்கியது. 'இது ஒரு மனிதத் தவறு. பொதுவாக நீதியரசர்கள் கூட்டல் கழித்தல் கணக்குகளைக் கவனிக்க மாட்டார்கள். தீர்ப்பு விவரம் சரியாக இருக்கிறதா என்றுதான் பார்ப்பார்கள்' என மூத்த வழக்கறிஞர்கள் காரணம் கூறினாலும், 'குமாரசாமி கணக்கு' வரலாற்றில் இடம்பெற்றது. 'இப்போது என்ன செய்கிறார் குமாரசாமி?' என நீதிமன்ற வட்டாரத்தில் விசாரித்தோம். “சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விடுதலை என தீர்ப்பு வழங்கிய ஓர் ஆண்டிலேயே குமாரசாமி ஓய்வு பெற்றுவிட்டார். 

பொதுவாக, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக ஒருவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டால், அவரை அரசு சார்ந்த துறைகளின் விசாரணை அதிகாரியாகவோ, தனி அதிகாரியாகவோ அரசு பயன்படுத்திக் கொள்ளும். ஓய்வுக்குப் பிறகு பத்துக்கும் மேற்பட்ட அரசுத் துறைகளில பணியாற்ற விருப்ப கடிதம் கொடுத்தார் குமாரசாமி. அந்தக் கடிதங்களைக் கிடப்பில் போட்டுவிட்டது கர்நாடக அரசு. அவருக்குப் பிறகு ஓய்வுபெற்ற நீதியரசர் சந்திரசேகரை (ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுத்த நீதிபதி இவர்) பல்வேறு அரசுத் துறைகளில் பயன்படுத்திக்கொண்டது கர்நாடக அரசு. இதனால் மனம் நொந்து போன குமாரசாமி, மத்திய அரசின் ரயில்வே வாரியத்தின் (Accident claim) பணிக்கு விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தையும் மத்திய அரசு நிராகரித்துவிட்டது. மீண்டும் கர்நாடக அரசின் அட்மினிஸ்ட்ரேஷன் கிரிமினல் (Criminal Justice Administration) என்ற பதவிக்கும் விண்ணப்பித்தார். இந்தப் பதவியையும் சந்திரசேகருக்கு அளித்துவிட்டு, குமாரசாமியை குப்புறத்தள்ளியது அரசாங்கம். 

ஒரே ஒரு தீர்ப்புக்காக ஒருவர் கொண்டாடப்படுகிறார். மற்றவர் நிராகரிக்கப்படுகிறார். ‘நீதிபதிகள் பாரபட்சமின்றி, விதிப்படி கடமையைச் செய்ய வேண்டும்; அப்பொழுதுதான் மக்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள்' என்ற அர்த்த சாஸ்திர வரிகளை மைக்கேல் டி குன்ஹா நன்றாக அறிந்து வைத்திருக்கிறார் போலும்.

-ராஜா

சார்ந்த செய்திகள்