நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், விசைத்தறி தொழிற்கூடங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விசைத்தறித் தொழில் பிரதானமாக உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, விருதுநகர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விசைத்தறி தொழில் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது. விசைத்தறி தொழிலில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விசைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் நாட்டின் பிற மாநிலங்களுக்கு மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அரபு நாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அந்நிய செலாவணியை ஈட்டித்தருவதிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நூல் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவது, விசைத்தறி தொழிலில் பெரும் தடுமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். வெண்ணந்தூர் விசைத்தறி சங்க முன்னாள் பொருளாளர் சிங்காரம் கூறுகையில், ''ஜவுளி உற்பத்தியில் விசைத்தறி தொழிலை நம்பி 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களும், கைத்தறி தொழிலை நம்பி ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் உள்ளனர்.
தமிழகத்தில் தினமும் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் ஜவுளி உற்பத்தி நடக்கிறது. அண்மைக் காலமாக ஜவுளித்தொழில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. பருத்தியில் தயாராகும் 40ம் எண் ரக நூல் 50 கிலோ கொண்ட ஒரு சிப்பம் கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. தீபாவளி பண்டிகையின்போது 13 ஆயிரம் ரூபாயாக விலை அதிகரித்தது. நூல் விலை உயர்வைக் கண்டித்து தொழில் கூடங்களை மூடி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினோம். ஆனாலும் மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் நூல் விலை மேலும் மேலும் உயர்ந்து தற்போது ஒரு சிப்பம் 15 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இதேபோல் விலையேற்றம் தொடர்ந்தால் விசைத்தறி தொழிற்கூடங்களை மூடும் நிலை ஏற்படும்.
காலங்காலமாக இத்தொழிலில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. மாற்றுத்தொழில்களைத் தேடிச் செல்ல வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.