Skip to main content

கன்டெய்னர் லாரியைத் திறந்த போலீசாருக்கு அதிர்ச்சி... ஈரோடு அருகே பரபரப்பு!

Published on 16/05/2020 | Edited on 16/05/2020

 

container Lorry


ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் கள்ளியம்புதூர் சோதனைச் சாவடியில் போலீசார் கடந்த 14- ஆம் தேதி இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு கன்டெய்னர் லாரி வந்தது. அந்த லாரியைத் தடுத்து நிறுத்தி, லாரி எங்கிருந்து வருகிறது, எங்கு செல்கிறது, எந்த சரக்கு பாரம் ஏற்றப்பட்டு உள்ளது போன்ற விவரங்களைக் கேட்டனர். 
 


அப்போது லாரியின் டிரைவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததால் போலீசார் சந்தேகம் அடைந்தனர். உயர் அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் அந்தச் சோதனைச் சாவடிக்கு வந்தனர். கன்டெய்னரைத் திறக்க வேண்டும் என்று டிரைவருக்கு உத்தரவிட்டனர்.
 

லாரியின் பின்பக்கமாகச் சென்ற டிரைவர் கன்டெய்னரைத் திறந்தார். அப்போது வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டமாகக் கன்டெய்னருக்குள் இருந்ததைப் பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். லாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில், அவர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நாசிர் அலி (வயது 28) என்பதும், திருப்பூரில் தங்கியிருந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 81 பேரை ஏற்றிக்கொண்டு அந்த மாநிலத்தில் உள்ள மொரதாபாத்துக்குச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.
 


திருப்பூரில் தங்கியிருந்து வேலை செய்து வந்த அந்தத் தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வருமானம் இல்லாமல் தவித்துள்ளனர். இதையடுத்து தங்களது சொந்த ஊருக்கு கன்டெய்னர் லாரியில் தப்பிச் செல்ல திட்டமிட்டு, இதற்காக லாரியின் டிரைவரிடம் வாடகைக்குப் பேசி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
 

இதையடுத்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து லாரியின் டிரைவர் நாசிர் அலியைக் கைது செய்ததுடன், கன்டெய்னர் லாரியும் பறிமுதல் செய்தனர். லாரியில் தப்பிச் செல்ல முயன்ற 81 தொழிலாளர்களையும் பெருந்துறை போலீசார் திருப்பூருக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்