தமிழ்நாட்டில் விளைநிலங்களில் உள்ள விவசாயத்தை அழித்து ஹைட்ரோ கார்ப்பன், அனல் மின்திட்டங்கள், அணு உலைகள், நியூட்ரினோ, எட்டு வழிச்சாலை, கெயில் குழாய் பதிப்பு மற்றும் சாகர் மாலா உள்ளிட்ட திட்டங்களால் விவசாயமும், விவசாயம் சார்ந்த தொழில்களும் அழிவுக்கு வந்துவிடும் என்பதால் இந்த திட்டங்களை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரழிப்பிற்கு எதிரான பேரிக்கம் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்படுகிறது.
இந்த சந்திப்பு இயக்கம் பிப்ரவரி 10ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்திற்காக மத்திய அரசு ஒப்பந்த செய்திருந்த நெடுவாசல், வடகாடு, கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து விழிப்புணர்வ ஏற்படுத்துகின்றனர்.
மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவதையடுத்து அந்த இயக்கத்தின் பொருப்பாளர் தங்க சண்முகசுந்தரம் தலைமையிலான குழுவினர் கீரமங்கலம், வடகாடு, நெடுவாசல் பகுதியில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள், ஹைட்ரோ கார்ப்பன் எதிர்ப்பு போராட்டக்குழுவினரை சந்தித்து ஆலோசனை செய்தனர்.
தொடந்தது சண்முகசுந்தரம் கூறும்போது, ஜனவரி 25ந் தேதி இயற்கை வோண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தஞ்சாவூர் மாவட்டம் இளங்காடு கிராமத்தில் தொடங்கும் மக்கள் சந்திப்பு விழிப்புணர்வு இயக்கம் பிப்ரவரி 22ந் தேதி வரை தஞ்சாவூர், அரியலூர், காரைக்கால், நாகபட்டிணம், கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நடக்கிறது. தொடர்ந்து பிப்ரவரி 23ந் தேதி தஞ்சாவூரில் பொதுக் கூட்டமாக நடத்தப்படுகிறது.
இந்த மக்கள் சந்திப்பில் தமிழ்நாட்டு மக்களையும், விவசாயத்தையும் அழிக்கும் திட்டங்களை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும். காவிரி பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட பெட்ரோ ரசாயன மண்டலத்தை ரத்து செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பதிலாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும். அனல் மின் திட்டம், அணு மின் திட்டம், உயர் மின் வழித்தடம் போன்ற திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மண், மணல், கல் குவாரிகளை மூடுவதுடன் நிலக்கரி சுரங்கத்திற்கு விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். போன்ற அழிவு திட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி மக்களை சந்திக்க உள்ளோம். இந்த இயக்கத்திற்கு அனைத்துக் கட்சிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது என்றார்.