உத்திரபிரதேசத்தில் பட்டியலினத்தை சோ்ந்த இளம்பெண்ணை இளைஞர்கள் 4 பேர், கரும்பு தோட்டத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து, அந்த பெண்ணின் நாக்கை அறுத்துள்ளனர். அதேநேரத்தில் கழுத்தில் அடித்து காயம் ஏற்படுத்தியுள்ளனர்.
கொடூரமாக தாக்கப்பட்ட அந்த இளம்பெண் உயிருக்கு போராடியுள்ளார். சரியான மருத்துவ சிகிச்சை பெறவிடாமல் அரசு தரப்பே தடுத்துள்ளது. கடந்த 14 நாட்களில் உயிர் போராட்டம் நடத்திய அந்த 18 வயது இளம்பெண் இறுதியில் மரணத்தை தழுவியுள்ளார். அந்த பெண்ணின் உடலை பெற்றோர்களிடம் தராமல் நள்ளிரவில் போலீஸாரே கொண்டு சென்று சுடுகாட்டில் வைத்து எரித்து அது சாம்பலாகும் வரை அங்கேயே நின்று பார்த்துவிட்டு பின்பே வந்துள்ளனர்.
அதேபோல் அந்த பெண்ணின் குடும்பத்தாரை காவல்துறை அதிகாரிகள், இதைப்பற்றி பேசக்கூடாது என மிரட்டியும் உள்ளனர். இந்த விவகாரத்தில் உ.பியை ஆளும் பாஜக முதல்வர் யோகிஆதித்யாநாத் அரசு சரியாக செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல்வர் அலுவலகத்தின் மிரட்டலால் மருத்துவர்கள், அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை, நாக்கு அறுபடவில்லை என்றார்கள். அந்த மாநில காவல்துறை தலைவரோ, கழுத்தில் அடிப்பட்டதால் தான் இறந்தார் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, நாக்கு அறுப்பட்டதை மீடியாவின் ஸ்டிங் ஆப்ரேஷனில் மருத்துவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் நியாயம் கேட்டு காங்கிரஸ் கட்சியின் தேசிய இளம் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி, அவரது சகோதரி ப்ரியங்காகாந்தி, அந்த குடும்பத்தாரை சந்திக்க கட்சி நிர்வாகிகளுடன் சென்றனர். அப்படி சென்றவர்களை காவல்துறை தடுத்தது. காரில் செல்லதானே தடை, நடந்து செல்கிறேன் என நடைபயணம் மேற்கொண்டனர். அவர் பின்னால் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டனர். ராகுல்காந்தியை தடுத்த போலீஸ் அதிகாரிகள் ஒருக்கட்டத்தில் அவரை அடித்து கீழே தள்ளினர். இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது காவல்துறையா, ரவுடிகள் படையா என நாடு முழுவதும் கண்டனக்குரல் எழுந்தது.
உ.பியை ஆளும் முதல்வர் யோகியின் கீழ் செயல்படும் காவல்துறையை, ரவுடிகள் படையாக மாறிவிட்டது எனக்கூறி இந்தியா முழுவதும் காங்கிரஸார் போராட்டம் நடத்த துவங்கியுள்ளனர். தமிழகத்திலும் சிலயிடங்களில் போராட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவரும், பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் முக்கிய நிர்வாகியுமான குமார் தலைமையில் 300க்கும் அதிகமான காங்கிரஸ் தொண்டர்கள் திருவண்ணாமலை டூ பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போலீஸார் கைது செய்ய முயல, சாலையில் படுத்துக்கொண்டு, காவல்துறைக்கு எதிராகவும், பாஜகவை கண்டித்தும் குரல் எழுப்பினர்.
செங்கம் போலீஸார் அவர்களை கைது செய்து ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்துவைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரத்துக்கு போக்குவரத்து தடை ஏற்பட்டது.