இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. இதற்கிடையில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்களுக்கு தொடர்ந்து கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது அரசுக்கு சவாலாக அமைந்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டர் பக்கத்தில், "மே 17 வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கின் கடைசி வாரம் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. தொற்று பரவுகிறது, 3 சதவிகிதம் மரணமடைகிறார்கள், பொருளாதாரம் 100 சதவிகிதம் குலைந்து விட்டது, ஏழை நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்களும் சிறு, குறு தொழில்களும் சிதைந்து விட்டன.
இச்சூழ்நிலையில் உங்களுக்கு நான் என்ன ஆறுதல் சொல்ல முடியும்? நம்பிக்கையோடு இருங்கள், காலம் மாறும், காங்கிரஸ் கட்சி சொன்ன யோசனைகளை நாடும் அரசும் ஏற்றுக்கொள்ளும் விடியல் ஏற்படும். தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் கவனமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன்" என தெரிவித்துள்ளார்.