கடந்த மூன்று நாட்களாக சென்னையில் விட்டுவிட்டுத் தொடர்ந்து மழை பொழிவதால் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒவ்வொருமுறை பொழியும் அதீத மழை மற்றும் வெள்ளத்தால் முதலில் பாதிக்கப்படுவது சென்னையின் வேளச்சேரி பகுதி. இந்தமுறையும் அங்கு மழைநீர் தேங்கி வெள்ளம் உருவாகியுள்ளது. வீட்டில் நிறுத்திவைக்கப்படும் வாகனங்கள் மழைநீரில் பாதிக்கப்படும் என்பதால் வேளச்சேரி பாலத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கியுள்ள தனது தொகுதி மக்களைக் காண முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் எதிரே உள்ள விஜயராகவ தெருவில் வசித்துவரும் வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹசன் மௌலானா வீட்டிலும் மழைநீர் தேங்கிய நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி தொகுதி மக்களை நேரில் சந்திக்க முடியவில்லை என அவரது டிவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.