மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து 131வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் இதுவரை 250- க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிர்நீத்த விவசாயிகளின் நினைவாக ஷாஜஹான்பூரில் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "டெல்லி ஷாஜஹான்பூர் எல்லையில், மோடி அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள நினைவுச் சின்னம்!... எத்தனை உயிர்கள்! எத்தனை துயரம்! என்று முடியுமோ இந்த கண்ணீர்க் கதைகள்! இந்தியா முழுவதிலும் இருந்து ஒருபிடி மண் கொண்டுவரப்பட்டு இந்த துயரார்ந்த நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.