உத்தரப்பிரதேசத்தில் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றி, துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்த சம்பவத்தையும், பிரியங்கா காந்தி கைதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்குக் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு ஒன்றிய மோடி தலைமையிலான அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''பஞ்சாபில் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலையை விட உத்தரப் பிரதேசத்தில் அதை விடக் கடுமையான படுகொலை நடைபெற்றுள்ளது''எனக் குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், ''மத்திய அமைச்சரின் மகன் விவசாயிகளின் போராட்ட களத்தில் காரை விட்டு 4 விவசாயிகள் கொலை செய்துள்ளார். அதனையொட்டி ஏற்பட்ட பிரச்சனையால் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 4 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர்.மேலும் ஒருவர் இறந்துள்ளார். மொத்தம் 9 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜாலியன் வாலாபாக்கில் படுகொலை நடந்த பிறகு ஆங்கிலேய அரசு காங்கிரஸ் தலைவர்களைப் படுகொலை நடந்த இடத்தை பார்வையிட அனுமதித்தது. இங்கு பலியான விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தியை அனுமதிக்காமல் கைது செய்துள்ளனர். அப்படி என்றால் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தைவிட மோடியின் ஏகாதிபத்தியம் கடுமையானது, கொடுமையானது எனப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
பிரியங்கா காந்தி கொலையான விவசாயிகளின் குடும்பத்தையும் சந்திக்காமல் டெல்லிக்குச் செல்லமாட்டேன் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரைப் பார்ப்பதற்கு விமானம் மூலம் வந்த சத்திஷ்கர் மாநில முதல்வரையும் விமான நிலையத்திலிருந்து வெளியே வர முடியாமல் தடுத்துள்ளனர். அவரும் விமான நிலையத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்திக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்.
இதிலிருந்தே தெரிகிறது இந்த நாட்டினுடைய ஜனநாயகம் தவறானவர்களின் கையில் எவ்வாறு பாடுபடுகிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை. தேசிய அளவில் மோடியின் முகத்தைப் பற்றி பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் புரிந்துள்ளனர். ஜனநாயகத்தை மீட்டெடுக்க அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டவர்கள் நாம் மோடியைப் போராடி வெற்றி பெறுவோம்'' என்றார்.
இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாநில துணைத் தலைவர்கள் மணிரத்தினம், சேரன், மாநிலச் செயலாளர் சித்தார்த்தன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.