நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளரும், மாநிலப் பொதுக்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் எம்.சரவணன் நேற்று (4.12.2022) நேரில் சந்தித்தார். அப்போது, ஸ்ரீரங்கம் பகுதி மற்றும் புறநகரிலிருந்து நகருக்குள் வந்து செல்லும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் காவிரி பாலத்தை கடந்து செல்வது என்பது மிகவும் ஆபத்தாக உள்ளது என்றும், மக்கள் படும் இன்னல்களைக் கருத்தில் கொண்டு பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் காவிரி பழைய பாலத்தில் உடனடியாக இருசக்கர வாகனங்களை அனுமதிக்க வேண்டும் எனவும், அமைச்சரிடம் பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொண்டார்.
மேலும், பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்க இருப்பதை கருத்தில் கொண்டு உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் சுவாமி தரிசனம் செய்ய வருகை தர உள்ளனர். அப்பொழுது இதைவிட பன்மடங்கு போக்குவரத்து நெரிசல் உண்டாகும். இன்று ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சி நகருக்குள் வருவதற்கு தஞ்சாவூர் சாலை பால்பண்ணை பகுதிக்கு வந்து தான் வர வேண்டியுள்ளது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் சார்பிலும், காங்கிரஸ் கட்சி சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் கண்டிப்பாக இடத்தை நேரில் வந்து பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் ஜி.எம்.ஜி.மகேந்திரன். காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், வஉசி பேரவை வீரேஸ்வரம் சங்கர், ஜங்ஷன் கோட்டம் பிரியங்கா பட்டேல், சோசியல் மீடியா மாநிலத் தலைவர் அபு, வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் கிருபாகரன் பட்டேல், உள்ளிட்ட பல காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.