திருவண்ணாமலையில் திமுக கொடிக்கம்பம் நட முயன்றபோது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்று திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திமுகவினர் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்துள்ள கிழக்குமேடு என்ற கிராமத்தில் சாலை ஓரத்தில் கலைஞரின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் கொடிக் கம்பம் நட ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது மேலே சென்ற மின் கம்பியின் மீது கொடிக்கம்பம் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி ஐந்து பேர் தூக்கி வீசப்பட்டனர். ரகுராமன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோதண்டராமன், மணி, ராஜு, அப்துல் உள்ளிட்ட நான்கு பேர் மருத்துவமனையில் படுகாயம் அடைந்து சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர். திமுக கொடிக் கம்பம் நட முயன்றபோது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.