திருச்சி கோவிட் வார்டில் பணி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாகவும், மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
திருச்சி அரசு மருத்துவமனையில் 180 மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களோடு 17 பிரிவுகளில் 80க்கும் அதிகமான மருத்துவ பிரிவை சாராத மருத்துவர்கள் பணி செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் 5 நாட்கள் கரோனா சிகிச்சை பணியில் இருந்துவிட்டு அடுத்த 5 நாட்கள் ஓட்டல்களில் தனிப்படுத்தப்பட்டு அடுத்த 5 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அதன்பிறகு கோவிட் பரிசோதனை செய்து முடிவுகள் வந்த பிறகே மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று விதியுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் குறைந்தளவு மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதை காரணம் காட்டி, இந்த விதிகள் எதையுமே பின்பற்றுவதில்லை.
பணி ஒதுக்கீடு செய்வதில்கூட பாரபட்சம் காட்டுகிறார்கள். இதுகுறித்து மருத்துமனை வட்டாரத்தில் விசாரித்தபோது, மருத்துமனையில் உயர்பதவியில் உள்ளவர்களின் உறவினர்கள் பலர் மருத்துவர்களாக இதே அரசு மருத்துமனையில் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்வது இல்லை. அமைச்சரின் சிபாரிசில் பணியில் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவருக்கு இதுவரை கோவிட் வார்டில் பணி அமர்த்தவே இல்லை.
மருத்துவக்கல்லூரியில் வகுப்பு எடுக்கும் மருத்துவர்கள் பலரை கோவிட் வார்டில் பணி அமர்த்துகிறார்கள். நோயாளிகளிடம் நேரடியாக பழக்கம் இல்லாத அவர்களை, இந்த பணியில் அமர்த்துவது பெரிய ஆபத்தில் போய் முடியும் என்கிறார்கள்.
கோவிட் பணியில் இருந்து திரும்பும் மருத்துவர்கள் யாரும் தனிமைப்படுத்திக்கொள்ளாமல் உடனே வீட்டிற்கு திரும்பி விடுகிறார்கள். இதுவும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இப்படி ஏனோதானோ என்று பணியை சுழற்சி முறையில் வழங்கி வருவதால் மருத்துவர்களிடம் ஒரு அயற்சி ஏற்படுகிறது என்கிறார்கள் அங்குள்ளவர்கள்.