நெல்லை மாவட்டத்தின் பணகுடி பகுதியைச் சேர்ந்த ப்ளஸ் 2 மாணவன் விக்னேஷும், அதே பள்ளியில் ப்ளஸ் 2 பயிலும் மாணவியும் காதலித்து வந்தார்கள். மாணவனுடனான மாணவியின் காதல் கசந்ததால், மாணவி வேறு ஒரு நபரைக் காதலிக்க, அந்த விபரம் மாணவனுக்குத் தெரிய வந்திருக்கிறது. அவளிடம் கேட்டதில், “நான் உன்னைக் காதலிக்கவில்லை” என மாணவி அழுத்தமாகச் சொல்லியிருக்கிறாள்.
அதிர்ந்த மாணவன், “நாம் நெருக்கமாக இருக்கும் படங்களை உன் தாயிடம் காட்டுவேன், பெண் கேட்பேன்” என்று மிரட்ட அரண்டுபோன மாணவி, மாணவன் கதையை முடிக்க தன் உறவினர் மூலம் கூலிப்படையை நாடினாள். கூலிப்படையினரின் திட்டப்படி மாணவி, மாணவன் விக்னேஷிடம், “நான் தெரியாமல் பேசிவிட்டேன். நான் உன்னைக் காதலிக்கிறேன். வீட்டுச் செலவிற்காக 25 ஆயிரம் கொண்டு வா” என அவனை சிங்கிகுளம் பக்கமுள்ள பெத்தானியா மலைப்பகுதிக்கு வரச் சொல்லியிருக்கிறாள்.
அதனை நம்பிய மாணவன், ஏப்ரல் 10 அன்று, பெத்தானியா மலைப்பகுதிக்கு சென்றான். மலையில் பதுங்கியிருந்த மாணவி வெடிகுண்டு, வீச்சரிவாள் சகிதம் கூலிப்படையினரோடு வந்திருக்கிறாள். அரிவாளைக் காட்டி மிரட்டிய கூலிப்படை, மாணவியை விட்டு ஒதுங்கிவிடு என்று மிரட்ட, பீதியாகிப் போன மாணவன், “நான் அவள் பக்கம் திரும்பிப் பார்க்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு ஓடியிருக்கிறான். மாணவனின் புகாரின் பேரில் களக்காடு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் படையினர் மலையில் பதுங்கியிருந்த கண்ணன், வாகைகுளம் முத்துமனோ, சந்திரசேகர் மாதவன் உள்ளிட்ட நான்கு பேரை ஆயுதங்களோடு வளைத்தனர்.
இதனை நக்கீரன் இணையதளம் செய்தியாக வெளியிட்டிருந்தது. விசாரணைக்குப் பின்பு கைது செய்யப்பட்ட இவர்களை களக்காடு போலீசார் ஸ்ரீவைகுண்டம் ஜெயிலில் அடைத்தனர். நேற்று (22.04.2021) மாலை அவர்கள் 4 பேரையும் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, போலீஸ் பாதுகாப்புடன் பாளை மத்திய சிறை வார்டன்களிடம் முத்துமனோ, சந்திரசேகர், கண்ணன், மாதவன் நான்கு பேரும் ஒப்படைத்தனர். அது சமயம் அந்த ஏ ப்ளாக்கிலுள்ள எதிர் பிரிவைச் சேர்ந்த சுமார் 20 பேர், கைதிகள் நான்கு பேரையும் சுற்றி வளைத்துத் தாக்கி, கல்லால் அடித்துள்ளனர்.
தப்பிக்க ஓடியவர்களை சிறைக்குள்ளேயே விரட்டித் தாக்கியது. தடுக்க முயன்ற வார்டன்கள் விரட்டப்பட்டனர். இதில் படுகாயமடைந்த 4 பேரும் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் படுகாயமுற்ற வாகைக்குளம் முத்துமனோ, நேற்றிரவு ஏழரை மணியளவில் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார். இதையறிந்த பாளை உதவி கமிஷனர்கள் ஜான் பிரிட்டோ, டவுண் சதிஷ்குமார் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் உள்ளிட்ட போலீசார் காவலை பலப்படுத்தியதோடு பாளை சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் வார்டன்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், இன்று நீதி விசாரணை நடத்தக் கோரியும் சம்பவத்துக்குக் காரணமானவர்களைக் கைது செய்யக் கோரியும் முத்துமனோவின் உறவினர்கள் பாளை அரசு மருத்துவமனை முன்பு உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கைதி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் காரணமாக நெல்லை மாவட்டக் கிராமப் பகுதிகள் பதற்ற நிலையிலிருக்கின்றன.