காவேரிப்பட்டணம் அருகே, சிறப்பு வகுப்பில் ஏற்பட்ட சிறு தகராறால் ஏற்பட்ட முன்விரோதத்தால் பத்தாம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய சக மாணவன் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள பன்னிஅள்ளியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வு இல்லாத நேரத்தில் மாணவர்களுக்கு பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்துவது வழக்கம். இதேபோல் மே 14ம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடந்ததால் மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர்.
அப்போது மாணவர்களில் ஒருவன் திடீரென்று பள்ளி வளாகத்தில் கிடந்த மாங்கொட்டையை எடுத்து சக மாணவன் மீது வீசியுள்ளான். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மற்ற மாணவர்கள் தகராறை விலக்கி விட்டதை அடுத்து, இருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். இந்த நிலையில் மறுநாள் (மே 15) நடந்த சிறப்பு வகுப்புக்கு மாங்கொட்டையை எடுத்து வீசிய மாணவன் வரவில்லை. இதனால், ஏற்கனவே மாங்கொட்டையால் அடி வாங்கிய சக மாணவன், ''இன்று நீ பள்ளிக்கு வந்திருந்தால் உன்னை தீர்த்துக் கட்டியிருப்பேன்,'' என மாங்கொட்டையை எறிந்த மாணவனின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு குரல் பதிவு மூலம் குறுந்தகவல் அனுப்பி இருந்தான்.
இதையடுத்து திங்கள் கிழமை (மே 16) நடந்த சிறப்பு வகுப்பு அவ்விரு மாணவர்களும் வந்திருந்தனர். குரல் பதிவு மூலம் குறுந்தகவல் அனுப்பிய மாணவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த மாணவனின் முதுகில் நேற்று குத்தினான். இதில் அவனுக்கு தோள்பட்டைக்குக் கீழ் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. எதிர்பாராமல் நடந்த இந்த தாக்குதலில் கத்திக்குத்துக்கு ஆளான மாணவன், ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தான்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், அவனை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணத்தில் நடந்த மாணவனின் கத்திக்குத்து சம்பவம் பள்ளி மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.