சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட தம்மநாயக்கன்பட்டி கிராம பஞ்சாயத்தில் ரைஸ்மில் தெருவிற்கு மட்டும் கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இது தொடர்பாக அந்த தெருவில் வசிக்கும் 7 குடும்பத்தினர் பஞ்சாயத்து கிளர்க், ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். ஆனாலும் அந்த தெருவிற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
இந்நிலையில், வியாழக்கிழமை (மே 30) காலையில், தம்மநாயக்கன்பட்டி ரைஸ்மில் தெருவைச் சேர்ந்த சுப்ரமணி, அவருடைய மனைவி ஜீவா, மகள் திவ்யா, தாயார் ஆராயி, தம்பி கிருஷ்ணன், அவருடைய மனைவி கிருஷ்ணவேணி, 2 சிறுவர்கள் மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த வசந்தா ஆகிய 9 பேர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அங்கு நுழைவு வாயில் பகுதியில், கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து, தாங்கள் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சேலம் நகர காவல்துறையினர், அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்து, உடலில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், ''தம்மநாயக்கன்பட்டி பஞ்சாயத்தில் நாங்கள் குடியிருக்கும் தெருவிற்கு மட்டும் ஒரு மாதமாக தண்ணீர் வரவில்லை. கிளர்க் சீனிவாசன், ஆபரேட்டர் பழனிசாமி ஆகிய இருவரும் வேண்டுமென்றே தண்ணீர் வழங்க மறுக்கின்றனர்.
குடிக்கக்கூட தண்ணீர் இன்றி தினம் தினம் செத்துப்பிழைக்கிறோம். நாங்கள் குடிநீர் கிடைக்காமல் தவிப்பில் சாவதைவிட, ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து செத்துவிடலாம் என வந்தோம். எங்களுக்கு உடனே குடிநீர் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரபட்சமாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.
இதையடுத்து, தீக்குளிக்க முயன்ற 5 பெண்கள் உள்பட 9 பேரையும் காவல்துறையினர் மீட்டு நகர காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.