கடந்த வாரம் தண்ணீர் குழாய்களே இல்லாமல் குடிநீர் இணைப்பு கொடுத்ததுபோல தற்போது முழங்கால் அளவு தண்ணீர் நிறைந்த குழிக்குள் அரசுப் பள்ளிக்குச் சுற்றுச்சுவர் கட்டிட கான்கிரீட் போட்ட அவலம் நடந்தேறியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மேல மணக்காடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குச் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று பல வருட கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சுற்றுச்சுவர் கட்ட அரசு நிதி ஒதுக்கியது. கடந்த வாரம் பூமி பூஜையுடன் சுற்றுச்சுவர் கட்டும் பணிகளும் தொடங்கியது. பில்லர்கள் அமைக்க குழிகள் தோண்டப்பட்டதும் தண்ணீர் ஊற்றெடுத்தது. அடுத்தடுத்த நாளில் பில்லர் குழி தெரியாத அளவில் தண்ணீர் நிறைந்திருந்தது.
சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிக்கு வந்தபோது ஒவ்வொரு பில்லர் குழியிலும் முழங்கால் அளவு தண்ணீர் நின்றது. வேகமாக வந்த கட்டுமானப் பணியாளர்கள் தண்ணீர் குழிகளுக்குள் இறங்கி நின்று சிமெண்ட் கான்கிரீட் கலவைகளைக் கொட்டி மிதித்து மட்டம் செய்தனர். தண்ணீருக்குள் பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பில்லர் குழியில் கான்கிரீட் போடுவதைப் பார்த்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் வந்து கேட்க, அதெல்லாம் ஸ்ட்ராங்கா இருக்கும் என்று சொல்லிக் கொண்டே கான்கிரீட் கலவையை தண்ணீருக்குள் கொட்டியுள்ளனர்.
சில குழிகளுக்குள் இருந்து பக்கெட்டில் தண்ணீரை அள்ள அள்ளத் தண்ணீர் ஊறிக்கொண்டே இருந்தது. அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இப்படி தண்ணீருக்குள் பில்லர் கான்கிரீட் போட்டால் எப்படி நிற்கும். அடித்தளமே இப்படி இருந்தால் சுற்றுச்சுவர் கட்டி முடிக்கும்போது சுவர் நிற்குமா? மாணவர்கள் அந்தப் பக்கமாக எப்படி அச்சமின்றி போக முடியும். இதனை ஏன் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள் பெற்றோர்கள்.