தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றியங்களில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வேலைகளுக்கான தினசரி பதிவேடுகள் மற்றும் அவர்களுக்கான சம்பளம் போன்றவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்ய தமிழ்நாடு முழுவதும் 887 பேர் கணனி இயக்குனர்களாக உள்ளனர். பல வருடங்களாக வேலை செய்து வந்தாலும் ரூபாய் 12 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தங்கள் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பல வருடங்களாகக் கோரிக்கை வைத்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பணி நிரந்தரம் செய்ய உத்தரவு வெளியிடப்பட்டது. அந்த உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் கடந்த 15 ஆம் தேதி முதல், கணினி இயக்குநர்கள் வேலை நிறுத்தப் போராடடத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் போராட்டம் தொடர்வதால் 100 நாள் வேலை பணியாளர்களின் விபரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. அதனால் தமிழகம் முழுவதும் இன்று சுமார் 50 லட்சம் பேர் 100 நாள் வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் தொடர்ந்தால் மேலும் 100 நாள் வேலைகளும் பணியாளர்களும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கால் வேலையிழந்து தற்போது மீண்டும் வேலை நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.