Skip to main content

“ஈஷா அறக்கட்டளை மீதான புகார்களை முழுமையாக விசாரிக்க வேண்டும்” - முத்தரசன்

Published on 19/10/2024 | Edited on 19/10/2024
Complaints against Isha Foundation should be thoroughly investigated says Mutharasan

ஈஷா அறக்கட்டளை மீதான புகார்கள்  முழுமையாக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா அறக்கட்டளை ஆசிரமம் குறித்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து வருகின்றன. அண்மையில் ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் எஸ்.காமராஜ் தனது இரண்டு மகள்கள் ஈஷா ஆசிரமம் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. அவர்களை ஈசா ஆசிரமத்தில் மூளை சலவை செய்து, மயக்கி அடைத்து வைத்துள்ளார். அவர்களை மீட்டுத் தர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்த போது, முனைவர் எஸ்.காமராஜின் இரண்டு மகள்களும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, “நாங்கள், எங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் ஆசிரமத்தில் தங்கி இருக்கிறோம். எங்களை யாரும் நிர்பந்தம் செய்யவில்லை” என்று கூறியுள்ளனர். அவர்களது பதிலை கேட்டு கொண்ட உயர்நீதிமன்றம், ஈஷா அறக்கட்டளை ஆசிரமம் தொடர்பாக பதிவாகியுள்ள அனைத்து வழக்குகளின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை நான்கு நாட்களுக்குள் வழங்குமாறு செப்டம்பர் 30 காவல் துறைக்கு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, கோவை காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் காவல் துறையினர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள், சமூக நல அலுவலர்கள் உட்பட அக்டோபர் முதல் தேதி ஈஷா அறக்கட்டளை ஆசிரமம் சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் ஈஷா அறக்கட்டளை ஆசிரமம் உச்சநீதி மன்றத்தை அணுகியது. ஆசிரமத்தின் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் செப்டம்பர் 30 ஆம் தேதி உத்தரவை நிறுத்தி வைத்து, காவல்துறை விசாரணையை தொடர தடை விதித்தது.

ஈஷா அறக்கட்டளை ஆசிரமம் தொடர்பான வழக்குகளின் தற்போதைய நிலவரம்  குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கோரிய  அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதன்படி காவல்துறை 23 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதன் விபரங்கள் ஊடகங்களில் விரிவாக வெளியாகியுள்ளது. அதில் ஆலந்துறை காவல் நிலையத்தில் நபர்களை காணவில்லை என்று பதிவான ஆறு வழக்குகளில் ஐந்து வழக்குகள் விசாரணை கோப்புகள் மூடி கட்டி வைக்கப்பட்டு விட்டன. ஒரு வழக்கில் காணமல் போனவரை இன்னும் தேடி வருவதாக கூறப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பான ஏழு வழக்குகளில், அது தற்கொலையா? இயற்கைக்கு புறம்பான சாவா? என்று விசாரணை நடந்து வருகிறது. தடய அறிவியல் பரிசோதனை அறிக்கை எதிர்பார்த்து விசாரணை நிலுவையில் இருக்கிறது என்பது உட்பட பல விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆசிரமத்தில் தகன மேடை அமைக்கப்பட்டதும் அது தொடர்பான வழக்கு ஒன்று இருப்பதாகவும் விசாரணை அறிக்கை கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கும் தகவலாகும். இந்த தகன மேடையில் எவ்வளவு பேரின் உடல் எரிக்கப்பட்டிருக்கும் என்ற ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது.

இந்த நிலையில் நேற்று (18.10.2024) உச்ச நீதிமன்றம் ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணையை முடித்து வைத்து, ஈஷா அறக்கட்டளை ஆசிரமம் தொடர்பான இதர வழக்குகளை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் விசாரிக்கவும், செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய உத்தரவுக்கும் தடையில்லை என தெளிவு படுத்தியுள்ளது.  இந்த குற்றவியல் வழக்குகளை விசாரிப்பதுடன் அதி நவீன கார்ப்பரேட் ஈஷா அறக்கட்டளை ஆசிரமம், பழங்குடி மக்கள் மற்றும் ஆதிவாசிகள் நிலங்களையும், அரசின் நிலங்களையும் ஆக்கிரமித்துள்ள புகார்கள் மீது அரசு தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்ற வினாவுக்கு வெளிப்படையான விடை அளிக்க வேண்டும்.

மர்மங்கள் நிறைந்த மந்திர தேசமாக விளங்கும்  ஈஷா அறக்கட்டளை ஆசிரமத்தின் மீதான குற்றவியல் மற்றும் உரிமையியல் புகார்களை முழுமையாக விசாரித்து, உண்மை நிலவரத்தை நாட்டுக்கும், மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும். குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்