திருச்சி வயலூரைச் சேர்ந்த ஆனந்தகுமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் "திருச்சி அருள்மிகு தருகவனேஸ்வரர் கோயில் செயல் அலுவலராக பணிபுரிந்து வருகிறேன். கோயில் திருவிழாவின் போது சிலைகள் கணக்கெடுக்கப்பட்ட போது 3 சிலைகள் மாயமானது தெரியவந்தது. இது தொடர்பாக ஜீயர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். எனது புகாரின் பேரில் கோயில் ஊழியர்கள் 10 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சிலை திருட்டு வழக்கில் எனக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் குற்றம்சாட்டினர்.
சிலைகளை திருடி விட்டு போலி சிலைகளை வைத்தது தொடர்பாக எனக்கும் எதுவும் தெரியாது. இருப்பினும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியும், ஜீயர்புரம் காவல் ஆய்வாளரும் விசாரணை என்ற பெயரி்ல் என்னை தொந்தரவு செய்து வருகின்றனர். எனவே என்னை தொந்தரவு செய்யக்கூடாது என காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது " அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் விசாரணைக்கு தான் அழைக்கப்பட்டார். அவரை போலீஸார் தொந்தரவு செய்யவில்லை என்றார். இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.