போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்து கடந்த 31 ஆண்டாக சம்பளம் பெற்று மோசடி செய்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையிடம் ஒட்டுமொத்த ஊதியத்தையும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் வட்டாரக் கல்வி அலுவலராகப் பணியாற்றி வருபவர் சபிக் ஜான். இவர் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
புகாரில் கூறியுள்ளதாவது:
காவேரிப்பட்டணம் அருகே உள்ள என்.மோட்டூரைச் சேர்ந்தவர் சுமதி. இவர் 31.1.1991ம் தேதி அரசுத் தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணியில் சேர்ந்தார். அதையடுத்து, சோபனூர் அரசுத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றினார். இந்நிலையில் அவர் போலிச் சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்திருப்பதாக வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவர் பணியில் சேரும்போது தனது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழைப் போலியாகத் தயாரித்து அரசிடம் சமர்ப்பித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆசிரியை சுமதி, உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் கடந்த 31 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். பணிக் காலத்தில் அவருக்கு அரசு வழங்கிய ஊதியம், இதர படிகள், ஊக்கத்தொகை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட அனைத்துப் பணப் பலன்களையும் வசூல் செய்ய வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார். இதுகுறித்து மாவட்டக் குற்றப்பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.