Skip to main content

மணல் கடத்திய ஒன்றிய செயலாளர்? - மன்னித்து விட்ட எஸ்.பி 

Published on 24/02/2023 | Edited on 24/02/2023

 

Complaint regarding sand smuggling in Vellore

 

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் அனுமதி பெறாமல் மணல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்றை பிப்ரவரி 23 ஆம் தேதி மாலை போலீசார் பிடித்துள்ளனர். அந்த லாரி அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆளும்கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் என்பவரின் லாரி எனக் கூறப்படுகிறது.

 

சென்னை டூ பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் அடுத்த செதுவாளை அருகே அடிக்கடி விபத்து நடக்கிறது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணாவுக்கு புகார் சென்றதன் பேரில் போலீஸ் அதிகாரிகள் ஆய்வுப் பணியை மேற்கொண்டுள்ளனர். அப்போது ராங் ரூட்டில் ஒரு லாரி வந்துள்ளது. அந்த லாரியை மடக்கிப் பிடித்துள்ளனர். அந்த லாரியில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட மணல் இருந்துள்ளது. மணல் ஏற்றிச் செல்ல முறையான ஆவணங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. அதனால் அந்த லாரியை காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று வழக்குப் பதிவு செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளார் எஸ்.பி.

 

ஆளும்கட்சி பிரமுகரின் லாரி மணல் கடத்தலில் சிக்கி போலீஸ் வழக்கு போட்டது என்றால் எதிர்க்கட்சிகள் இதனை வைத்து அரசியல் செய்யும், ஆளும்கட்சிக்கு அவப்பெயராகிவிடும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணாவிடம் ஆளும்கட்சி பிரமுகர்கள் சிலர் தொடர்புகொண்டு வழக்கு போட வேண்டாம் எனப் பேசியுள்ளனர். அதனை அவர் ஒப்புக்கொள்ளவில்லையாம்., வழக்கு போடப்படும் எனக் கூறியுள்ளார். இறுதியில் தொகுதி எம்.எல்.ஏவும் திமுக மா.செவுமான நந்தகுமாரே, எஸ்.பியை தொடர்புகொண்டு வழக்கு போடாதீர்கள் என கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மணல் கடத்திய ஒ.செ லாரியை போலீசார் விடுவித்துள்ளனர். 

 

ஏற்கனவே பாலாற்று மணல் கொள்ளை தீவிரமாக நடக்கிறது. அதனை தடுக்காமல் காவல்துறை தூங்குகிறது எனக் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் மணல் திருடிய லாரியை பிடித்து மீண்டும்  விடுவித்தது சரியா என விவசாய சங்கத்தினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

இது குறித்து எம்.எல்.ஏ நந்தகுமாரை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, “தவறான தகவல். எஸ்.பி ஆய்வு செய்துகொண்டு இருந்தபோது ராங் சைடில் லாரி வந்துள்ளது. அதனால் அதனை பிடித்து வழக்கு போடச் சொல்லியுள்ளார். இது பற்றி என்னிடம் கூறினார்கள். தவறுதலாக வந்திருப்பார்; இந்த ஒருமுறை மன்னித்துவிட முடியுமா எனக் கேட்டேன். அவரும் மன்னித்து விட்டுள்ளார். லாரியில் மணல் இருந்ததாகத் தகவல் பரவியுள்ளது. அது உண்மையல்ல” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்