சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவில் பணியாற்றிவந்த காவல் ஆய்வாளர் கவிதா என்பவரை தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் கயல்விழி பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
சீர்காழி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் கயல்விழிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அதேபோல், இந்த சட்டவிரோத செயல்களுக்கு காவல்துறையும் துணையாக இருப்பதாகவும் அவருக்கு தொடர் புகார்கள் வந்தன.
இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட கயல்விழி ஐ.பி.எஸ், சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவில் பணியாற்றிவந்த காவல் ஆய்வாளர் கவிதா என்பவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தஞ்சை சரக காவல்துறை தலைவரின் அதிரடி நடவடிக்கைக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதுபோன்று தஞ்சை காவல் சரகத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனையில் யாரேனும் ஈடுபட்டாலோ அல்லது அதற்கு காவல்துறை உடந்தை என தகவல் வந்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.