தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை சார்பில் விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்திற்கு அமைச்சர்கள், சக்கரபாணி மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமை தாங்கினர். அதைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளருக்கு வழங்கினார்கள்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, “இந்த ஆண்டு நெல் அறுவடைக்கு முன்பாகவே கொள்முதல் பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. ஏனென்றால் சென்ற ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் தமிழகத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் பொறுத்தவரையில் 5 லட்சத்து 60 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து 40 லட்சத்து 50 ஆயிரம் டன் தமிழகம் முழுவதும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் விவசாயம் இருந்து 8 லட்சத்தி 20 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர், தேர்தல் சமயத்தில் தகுதியுள்ள நபர்கள் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தால் 15 நாளைக்கு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். அதன் அடிப்படையில், ஆட்சி பொறுப்பேற்ற 14 மாத காலத்துக்குள் தமிழகத்தில் 12 லட்சத்து 54 ஆயிரத்து 270 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 32 ஆயிரத்து 123 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆயிரம் குடும்பங்களுக்கு மேலான 141 கடைகளில் 30 கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கடைகளும் விரைந்து பிரிக்கப்படும். தமிழக முதல்வர் பத்து லட்சம் மதிப்பீட்டில் முழு நேர நியாய விலை கடைகளும், ஏழு லட்சம் மதிப்பீட்டில் பகுதிநேர நியாய விலை கடைகளும், கழிப்பறை வசதியுடன் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளார்.
நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு எந்தவித சிரமும் வரக்கூடாது என்பதனை கருத்தில் கொண்டு அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மூட்டைக்கு 3.25 ரூபாயாக இருந்த படி காசை, மூட்டைக்கு 10 ரூபாயாக உயர்த்தி வழங்கியுள்ளார். ஒவ்வொரு நேரடி கொள்முதல் நிலையங்களிலும் புகார் பெட்டி ஒன்று அமைக்கவும் அதேபோல் எங்கள் துறை சார்ந்த அனைத்து அலுவலர்கள் தொலைபேசி எண்களும் கொள்முதல் நிலையங்களில் உள்ள பலகையில் குறிப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புகார் பெட்டியில் வரும் புகார்கள் மீது மாவட்ட ஆட்சித் தலைவரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.
இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் உள்பட அதிகாரிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் விவசாயிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.