மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசியது வைரலானது. அவர் பேசியது, "பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதில் நமக்கு ஒரு லாபமும் இல்லை. மணிப்பூரிலிருந்து யாரும் நமக்கு ஓட்டு போடப் போவதில்லை. இங்கே இருக்கிற கிறிஸ்தவர்களும் ஓட்டு போடப் போவதில்லை. நாம் நினைச்சுக்கிட்டு இருக்கோம், கிறிஸ்துவத்தையும் இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று, திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. திமுகவிற்கும், அதிமுகவிற்கும் ஓட்டுப்போட்டு நம்மை இப்படி ரோட்டில் போராட விட்டுவிட்டார்கள்'' என பேசியிருந்தது வைரலானது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம் செய்தியாளர்கள் இந்த பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், ''மன்னிப்பு கேட்டுவிட்டேன் என்றால் எனக்கு ஓட்டு போட்டுவிடுவார்களா? வருத்தம் தெரிவிக்க வேண்டியது எனது மக்கள்தான். என்னைப் போன்று நிற்போரை ஆதரிக்காமல் நடுத்தெருவில் போராட விட்டது யாரு? அநீதிக்கு எதிராக போராடிய ஒரே ஒருவர் பழனிபாபாதான். அவரையே நீங்கள் மதிப்பதில்லையே. அவரையே அநியாயமாக சாக விட்டவர்கள்தானே. மானமுள்ள தமிழன் திமுகவிற்கு ஓட்டு போடுவானா என கேட்டவர் பழனி பாபா. அதனால் அவரைப்பற்றி பேச மாட்டார்கள். அவரை விடவா நான் பேசிவிடப் போகிறேன். அவரே உங்களுக்கு ஒரு பொருட்டல்ல நானெல்லாம் ஒரு பொருட்டா? முதலில் அண்ணன் ஜவாஹிருல்லா கலைஞரைப் பற்றி பேசியதை கேட்டுள்ளீர்களா? முதுகில் குத்திய துரோகி எனக் கலைஞரை பேசியுள்ளார். ஆனால் இப்பொழுது அங்கு ஒரு சீட்டுக்காக நிற்கிறீர்கள்'' என்றார்.
சீமானின் பேச்சு சர்ச்சையான நிலையில் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிட நட்பு கழகம் அமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.