கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதிக்கு அருகே உள்ளது ரங்காபுரம் கிராமம். இந்த பகுதியில் ஏராளமான பட்டியலின சமூகத்தை சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், அவர்களுக்கு சரியான கழிவறை வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். அதே நேரம், ரங்காபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மற்ற தரப்பினருக்கு தரமான முறையில் குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
ஆனால், ரங்காபுரத்தில் வாழும் பட்டியலின சமூக மக்கள் தங்களது வீட்டு வாசலில் அமைக்கப்பட்டுள்ள குழியிலிருந்து கசியும் தண்ணீரை தற்போது வரை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இத்தகைய மாசடைந்த தண்ணீரை பயன்படுத்தி வருவதால் அந்த பகுதியில் வாழவும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது.
இந்நிலையில், தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால், அந்த மனுக்கள் மீது தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒருகட்டத்தில் விரக்தியடைந்த ரங்காபுரம் கிராம மக்கள், தங்கள் பகுதிக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத மாவட்ட ஆட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து, அந்த புகாரை விசாரிக்க ஒப்புக்கொண்ட தேசிய ஆணையம், கோவை மாவட்ட ஆட்சித் தலைவரை விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் வழங்கியுள்ளனர். அதே சமயம், குழியிலிருந்து கசியும் தண்ணீரை பயன்படுத்தும் பட்டியலின மக்களின் அவல நிலை குறித்த வீடியோ காட்சிகள் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.