ஆத்தூரில், சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பர தட்டிகளை வைத்திருந்த கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் உள்பட 11 நிறுவனங்களுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி காவல்துறை சம்மன் அளித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் இயங்கும் பல தனியார் பள்ளிகள், கல்லூரிகள் நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மரங்களில் ஆணிகளை அடித்து விளம்பர தட்டிகளை வைத்துள்ளன.
இதனால் மரங்களின் ஆயுள் குறைவதுடன், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, புத்திரகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் அக்னி செல்வம், மாநில அமைப்புக்குழு உறுப்பினர் ராஜலிங்கம் ஆகியோர் ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் கேசவன், அதற்குரிய சிஎஸ்ஆர் ரசீது கொடுத்தார். மேலும், 'இந்த புகாரின் மீது எப்ஐஆர் போட முடியாது. வேண்டுமானால் உயர் போலீஸ் அதிகாரிகளைப் பாருங்கள்,' என்று அலட்சியமாக கூறினார்.
இதனால் புகார்தாரர் தரப்புக்கும், ஆய்வாளர் கேசவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. திருப்பூரில் இதேபோன்ற புகாரில், நீதிமன்றம் வரை சென்று, அங்கு மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்த நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக அக்னி செல்வம் சுட்டிக்காட்டினார். மேலும், எப்ஐஆர் பதிவு செய்ய முடியாவிட்டால் அதுகுறித்து எழுத்து மூலம் பதில் அளிக்கும்படியும் கோரினர்.
பின்னர் ஒருவழியாக, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளிடம் நேரில் அழைத்து விசாரணை நடத்தப்படும் என்று காவல் ஆய்வாளர் கூறினார். இதையடுத்து புகாரில் கூறப்பட்ட 11 தனியார் பள்ளி, கல்லூரி தாளாளர்களுக்கும் நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி, அம்மம்பாளையம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி, ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் பள்ளி, நரசிங்கபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக் பள்ளி, கள்ளக்குறிச்சி ஏகேடி மெட்ரிக் பள்ளி, கெங்கவல்லி கோல்டன் பாலிடெக்னிக், தேவியாக்குறிச்சி தாகூர் மெட்ரிக் பள்ளி, சாமியார் கிணறு ஜெயம் மெட்ரிக் பள்ளி, சேலம் ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி, செல்லியம்பாளையம் ஏஇடி மெட்ரிக் பள்ளி ஆகிய 9 கல்வி நிலையங்களுக்கும், சூர்யா ஃபென்சிங், சி.கே. ஆப்டிகல்ஸ் என இரு தனியார் நிறுவனங்கள் உள்பட 11 நிறுவனங்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.