புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது குடியுரிமை சட்டம் முஸ்லிம் மக்களை பாதிக்காது எனக் கூறும் மத்திய, மாநில அரசுகள் ஏன் அதை சட்டமாக்கவில்லை? ஏற்கெனவே, பாபர் மசூதியை இடிக்க மாட்டோம் என உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்த பாஜகதான் பின்பு இடிக்க காரணமாக இருந்தது.
எனவே, மத்திய, மாநில அரசுகள் சொல் வேறு, செயல் வேறாக உள்ளது. டெல்லி போராட்டத்திற்கு பிறகு வடமாநிலங்களில் போராட்டங்கள் ஓய்ந்துவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் எதிர்கட்சிகள் தான் போராட்டங்களை தூண்டிவிடுவதாக மத்திய அரசும், முதலமைச்சரும் சொல்கிறார்களே? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு..
எதிர்க்கட்சிகள் போராட்டங்களை தூண்டவில்லை. குடியுரிமை சட்டத்தை திருத்தி பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தான் போராட்டங்களை தூண்டிவிடுகிறார்கள். அதனால் நடவடிக்கை எடுத்தால் அவர்கள் இருவர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் என்று நம்புகிறீர்களா?
காளைமாடு பால் கறந்தால் தான் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார்கள்.
கரோனா வைரஸ் பேரிடர் பாதிப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதா?
மாநில அரசு பல்லுப்போனது.எந்த நடவடிக்கையும் எடுக்காது. இவ்வாறு கூறினார். பேட்டியின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மாதவன், முன்னாள் மாவட்டச் செயலாளர் செங்கோடன், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் இருந்தனர்.