காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நியூசிலாந்து நாட்டில் ஆக்லாண்ட் நகரில் நடைபெற்றது. இதில் பளுதூக்கும் போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா உட்பட 13 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவால் இந்தப் போட்டியில் பங்கேற்க முடியாததால் மற்ற 12 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கச் சென்றனர். தமிழக அரசு சார்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார். நவம்பர் 28 ஆம் தேதி தொடங்கிய போட்டிகள் டிசம்பர் 4 வரை நடந்து முடிந்தது. இதில் 12 பேரில் 11 வீரர், வீராங்கனைகள் மெடல் அடித்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்களுள் தஞ்சை மாவட்டத்திலிருந்து சென்ற இருவரில் மாஸ்டர் பிரிவில் 490 கிலோ எடை தூக்கி வெள்ளிப் பதக்கம் பெற்றார் பயிற்சியாளரான பட்டுக்கோட்டை ஜிம் ரவி. இவரிடம் பயிற்சி பெற்ற எம்.பி.ஏ முதுகலை பட்டதாரியான லோகப்பிரியா (வயது 22) 52 கிலோ எடைப் பிரிவில் 350 கிலோ தூக்கி தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இந்த மகிழ்ச்சி 5 நிமிடம் கூட நீடிக்கவில்லை. லோகப்பிரியா வெற்றிக்கனி பறிக்கும் வரை காத்திருந்து அனைவரது பாராட்டையும் பெற்று தேசியக் கொடியோடு மெடல் வாங்கிக் கொண்டு கீழே இறங்கும் போது அவரிடம் சொன்ன தகவல் அப்படியே நொறுங்கிப் போக வைத்தது. உன் தந்தை காமன்வெல்த் போட்டியை பார்த்துக் கொண்டிருக்கும் போது மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக உன் சித்தப்பா தகவல் சொல்கிறார் என்றதும் வெற்றியின் மகிழ்ச்சியைக் கொண்டாட நினைத்த வீராங்கனை தந்தையை இழந்த துக்கத்தில் நிலைகுலைந்து போனார். இந்த சாதனையை பார்க்க தானே இத்தனை காலம் உழைத்தார். என் மெடலை அவரிடம் காட்ட வேண்டும் என்று நினைக்கும் போது அவர் இல்லையே எனக் கதறி அழுதுள்ளார். அருகில் இருந்த சக பயிற்சியாளர்களும் வீரர், வீராங்கனைகளும் ஆறுதல் கூறி தேற்றியுள்ளனர்.
5 ஆம் தேதி காலை சொந்த ஊருக்கு சென்றுவிடலாம் என்று கூறிய போது, எப்போது வரும் 5 ஆம் தேதி எனக் காத்திருந்தவர், தான் வளர்ந்த பட்டுக்கோட்டை வந்த போது ஊரே திரண்டு நின்று பயிற்சியாளர் ரவி மற்றும் லோகப்பிரியா ஆகியோருக்கு மாலைகள் அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
அதன் பிறகு தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகில் உள்ள கல்லுக்காரன்பட்டிக்கு சென்ற போதும் அங்கும் வரவேற்றனர். நேராக தன் தந்தை செல்வமுத்து புதைக்கப்பட்டுள்ள கல்லறைக்குச் சென்று, கதறி அழுது மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய பிறகு, வீட்டிற்குச் சென்ற லோகப்பிரியாவை மொத்த உறவுகளும் கட்டிப்பிடித்து கதறி அழுதனர். மீண்டும் ஒரு முறை தன் தந்தைக்கு அஞ்சலியாக தன் தந்தையின் நினைவோடு நாட்டுக்காக தொடர்ந்து சாதிப்பேன் என்றார். காமன்வெல்த் வெற்றியைக் கொண்டாட வேண்டிய நேரத்தில் தந்தைக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வு அனைவரையும் கண்கலங்க வைத்தது.