தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அதற்கான கொண்டாட்டத்திற்காக மக்கள் தயாராகி வருகின்றனர். தங்களுக்குத் தேவையான புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காகக் கடைவீதிகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்பொழுது கரோனா கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்த நிலையில், இந்த முறை பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த வருடம் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகச் சென்னை போன்ற நகரங்களில் பட்டாசு வெடிப்பதற்கான நேரக்கட்டுப்பாடு கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவேண்டும் எனச் சென்னை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனச் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சங்கர் ஜிவால், ''தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகம் அடையாளம் அறியும் செயலி, கண்காணிப்பு கேமராக்கள் உட்பட நான்கு வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். 125 டெசிபல் அளவுக்கு மிகாமல் பட்டாசுகள் வெடிப்பது இருக்க வேண்டும். இந்த விதிகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். உரியப் பாதுகாப்புடன் 683 பட்டாசுக் கடைகளுக்கு இந்த ஆண்டு உரிமம் வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.