நச்சு மாசுக்களை கிளப்புகிற ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே 22 அன்று தூத்துக்குடி மாவட்டக் கலெக்டரிடம் மனுக்களைக் கொடுப்பதற்காக தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரப் பொதுமக்கள் பேரணியாகச் சென்ற போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவி ஸ்நோலின், ரஞ்சித் குமார், தமிழரசன், சண்முகம், கந்தையா என 13 அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். படுகாயம் காரணமாக பலர் உடலுறுப்புகளையும் இழந்தனர்.
சுற்று சூழல் ஆர்வலர் பாத்திமா பாபு தலைமையிலான குழு நினைவேந்தலுக்காக மதுரை உயர்நீதிமன்றக் கிளையை நாடியது. மே22 அன்று குறிப்பிட்ட மண்டபத்திற்குள் காலை 9 முதல் 11 மணிக்குள் நினைவேந்தல் நிகழ்ச்சியை முடித்துக் கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்றக் கிளையில் உத்தரவானது.
துப்பாக்கிச் சூட்டில் கோரம் நடந்த முதலாண்டு என்பதால் காவல்துறை மூவாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாரைக் குவித்து தூத்துக்குடி தாலுகாவையே தங்களின் கட்டுப்பாடு மற்றும் கண் பார்வைக்குள் கொண்டுவர, நகரில் இனம்புரியாத பதற்றம் பரவியது.
முன்னேற்பாடாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் 47 பேர்கள் மீது சி.ஆர்.பி.சி. பிரிவு 107ன் படி ஆர்.டி.ஒ. முன் ஆஜராகும் படியான வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பலியானவர்களில் கிறிஸ்தவர்களும் அடக்கம் என்பதால் அன்றைய தினம் சர்ச்சகளில் நினைவஞ்சலி நடத்தப்படலாம் என்பதால், நகர சர்ச் பாதிரியார்களிடம் நினைவேந்தல் தவிர வேறு சர்ச்சகை்குரிய வகையில் பேசக் கூடாது என்கிற உத்திரவாதமும் பெறப்பட்டது.
மினி சகாயபுரத்தின் சர்ச்சில் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலியும், திருப்பலியும் நடந்தது. அதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திவிட்டு வந்த டைரக்டர் கௌதம் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், தேர்தலுக்குப் பின் ஸ்டெர்லைட் திறக்கப்படும் என்கிற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. அதை மீண்டும் திறக்க விட மாட்டோம். உயிரைக் கூடத் தரத் சித்தமாக இருக்கிறோம் என்றார்.
முதலாண்டு நினைவேந்தல் முடிந்தாலும் அந்த வடுக்கள் ஆலைக் கெதிரான எதிர்ப்புணர்வு மக்களிடையே கனன்று கொண்டு தானிருக்கிறது.