Skip to main content

கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா 2 ஜிபி டேட்டா கார்டு வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

Published on 10/01/2021 | Edited on 10/01/2021


 

collge students free data pack cm edappadipalaniswami announced

கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா 2 ஜிபி டேட்டா கார்டு வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

 

இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு எடுத்த பல்வேறு சீரிய நடவடிக்கைகளின் காரணமாக உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களின் சேர்க்கை விகிதம் தமிழ்நாட்டில் 32 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், கல்லூரி மாணாக்கர்கள் சிறந்த கணினி திறன்களைப் பெற்றிட தமிழக அரசு, அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

 

கோவிட்- 19 பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த இணைய வழி வகுப்புகளில் மாணாக்கர்கள் கலந்துக் கொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதிக் கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணாக்கர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2ஜிபி தரவு (2GB Data) பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள் (Data Cards) வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன். 

 

இக்கோவிட் பெருந்தொற்று காலத்திலும் இணைய வழி வகுப்புகள் மூலமாக சிறந்த முறையில் கல்வி கற்றிட தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா தரவு அட்டைகளை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் மேன்மேலும் சிறக்க வேண்டுமென்று மாணாக்கர்களைக் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்