இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கரோனாவின் இரண்டாம் அலை பரவல் அதிகமாக இருந்ததன் காரணமாக நாடு முழுவதும் முற்றிலுமாக முடங்கியது. மாநிலங்கள் அவற்றின் கரோனா பாதிப்புக்கு ஏற்றார்போல் முழு முடக்கத்தையும் தளர்வுகளையும் அறிவித்து பின்பற்றி வந்தன. கல்வி நிலையங்கள் மூடப்பட்டதால் மாணவர்களும் தங்களது படிப்பினை ஒழுங்கான முறையில் தொடர முடியாமல் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தமிழக அரசு செய்துள்ளது. மேலும், நீண்ட காலத்திற்குப் பின் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வருவதால் எடுத்தவுடன் பாடங்களை நடத்தாமல், உளவியல் ரீதியாக மாணவர்களைத் தயார்ப்படுத்தவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. சுமார் எட்டு மாதங்களுக்குப் பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவது தற்போது மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள வள்ளியம்மாள் மகளிர் கல்லூரியில் மாணவிகள் மகிழ்ச்சியுடன் கல்லூரிக்கு வந்தனர்.