தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கான அறிமுக கூட்டம் நத்தம் தனியார் மஹாலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளரும் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டி அம்பலம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் விஜயன் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பேசும் போது, ''தமிழகத்தில் உணவுத்துறை சார்பில் தமிழக மக்களுக்கு 9 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக அரசின் சாதனையாக மகளிருக்கான இலவச பேருந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. நத்தம் பேரூராட்சியில் திமுக வேட்பாளர் சேக் சிக்கந்தர் பாட்சா வெற்றிபெற்று பேரூராட்சி தலைவராகினால் நத்தத்திற்கு உடனடியாக கல்லூரி கொண்டு வரப்படும். நத்தம் பகுதிகளில் பாதாளச் சாக்கடை, மின்மயானம், வீடு இல்லாத பொதுமக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு, நூலகம், மா, புளி விவசாயிகளுக்குக் குளிர்சாதன கிட்டங்கி அமைத்துத் தரப்படும். நத்தத்தில் 18 வார்டுகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினரை வெற்றிபெறச் செய்ய வேண்டும்'' என்றார்.