கல்லூரி விடுதி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
இன்ஜினியரிங் கல்லூரி மாணவி, விடுதியின் மூன்றாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம், கொந்தகை அருகே முனியாண்டிபுரத்தை சேர்ந்தவர் பரணிதாஸ். இவரது மகள் தாரணி (19) திண்டுக்கல் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பிஇ (ஐடி) 2ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் அவர் தங்கி இருந்தார்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் விடுதியின் மூன்றாம் மாடியில் இருந்து அவர் திடீரென கீழே குதித்தார். படுகாயமடைந்த அவர், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். தாரணி ப்ளூவேல் கேம் விளையாடி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் தாரணிக்கும், விடுதி வார்டனுக்கும் தகராறு இருந்து வந்ததாகவும் தெரிகிறது. அதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தாரணி தற்கொலை சம்பவத்தால் நேற்று கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
மகள் சாவில் மர்மம்: தந்தை பரபரப்பு பேட்டி: மாணவி தாரணி மரணம் குறித்து தந்தை பரணிதாஸ் கூறும்போது,
‘‘கடந்த 25ம் தேதி இரவு 10 மணியளவில், தாரணி மற்றொருவர் செல்போனில் இருந்து எங்களிடம் பேசினார். அப்போது நன்றாக பேசியவர், இரவு சுமார் 12 மணிக்கு மீண்டும் போன் செய்து, ‘இங்கே ரொம்ப டார்ச்சர் செய்றாங்க. என்னை கூட்டிட்டு போங்க..’ என்று அழுதார். உடனே இணைப்பு ‘கட்’ ஆனது. அந்த நேரத்தில்தான் ஏதோ நடந்துள்ளது. அதன்பின் அந்த எண்ணை தொடர்பு கொண்டும், யாரும் போனை எடுக்கவில்லை. தாரணியின் உடலில் எலும்பு முறிவோ, பலத்த காயமோ இல்லை. கீழே குதித்து விட்டதாக கூறுவது பொய். அவரிடம் போன் இல்லாதபோது, எப்படி ப்ளூவேல் விளையாடி இருக்க முடியும்? எனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவரை யாரோ துன்புறுத்தி உள்ளனர். இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி, உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும்,'' என்றார்.