மது வாங்கித் தராத கல்லூரி மாணவனை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற சில இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாய்குமார். இவர் மதுரவாயலில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று சாய்குமார் அவரது நண்பர்களுடன் சேர்ந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை மூன்றாவது பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அவர்கள் அருகில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்த நான்கு நபர்கள் சாய்குமாரிடம் மருந்து வாங்கித் தருமாறு மிரட்டியுள்ளனர். அப்பொழுது கல்லூரி மாணவன் தனது நண்பர்களை செல்போனில் அழைக்க அந்த டாஸ்மாக் கடைக்கு காஞ்சிபுரம் மாவட்டம் திரௌபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சூர்யா என்பவர் இரண்டு மாணவர்களுடன் அந்த டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார்.
அதற்குள் சாய்குமாரை பிடித்துக்கொண்ட 4 பேர் மது வாங்கி தந்தால் தான் உன்னை விடுவேன் என கூறி தாக்க முற்பட்டனர். அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் அமரவைத்து கடத்திச் சென்று சாய்குமாரிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு மதுரவாயல் சாலையில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சாய்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் அம்பத்தூரை சேர்ந்த மோசஸ்,கவுதம், மேற்கு முகப்பேரை சேர்ந்த பிபின் கிருஷ்ணன், கள்ளக்குறிச்சியை சேர்ந்த குமார் ஆகிய 4 பேரையும் முகப்பேரில் வைத்து கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.