தமிழகத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது கல்லூரிகள் மட்டும் எட்டு மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது.
மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த போதிலும், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் முடிக்கப்பட்டு, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டுவந்தன.
இந்நிலையில் ஆராய்ச்சி மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு 2ஆம் ஆண்டு மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வியை கருத்தில்கொண்டு அவர்களுக்கு மட்டும் இன்று முதல் நேரடி வகுப்பு நடத்த அரசு அனுமதித்துள்ளது.
அதன் அடிப்படையில் இன்று முதல் கட்டமாக ஆராய்ச்சி மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி திறக்கப்பட்டு, கரோனா தடுப்பு விதிமுறைகளோடு வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதேபோல் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும், இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் வருகின்ற 7ஆம் தேதி முதல் கல்லூரி தொடங்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு வருகின்ற மாணவர்கள் தனிநபர் இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கடைபிக்கவேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.