Skip to main content

“நீ எல்லாம் ஒரு பொண்ணா...” - கண்ணீருடன் கடைசியாக ஆடியோ வெளியிட்டு கணவர் தற்கொலை

Published on 24/12/2022 | Edited on 24/12/2022

 

husband lost their life

 

“என்ன நீ ஒருநாள் கூட ஹஸ்பன்ட்-ஆ பாக்கலியே விஜி.. இதுதான் என்னோட கடைசி ஆடியோ.. மன்னிச்சிடுங்க அம்மா... அம்மா மாதிரியெல்லாம் ஒரு பெண் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் அப்பா.. அம்மாவை திட்டாத அப்பா...” எனக் கண்ணீருடன் கோவை இளைஞர் ஒருவர், இறப்பதற்கு முன் வெளியிட்ட ஆடியோ பலரையும் கலங்க வைத்துள்ளது.

 

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி ஈஸ்வரி. இந்த தம்பதியின் மூத்த மகன் சிவா என்கிற ரத்தினசீலன். 30 வயது எம்.பி.ஏ பட்டதாரியான இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். சமீபத்தில் திருமணமான சிவா, சில தினங்களுக்கு முன் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதன் பின்னணியில் வெளியாகியுள்ள தகவல்கள் பகீர் ரகமாக இருக்கிறது.

 

சிவாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், “எங்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உண்டு. எங்களது மகன் கடந்த நான்கு வருடங்களாகத் தனியார் நிறுவனத்தில் இன்டர்னெல் ஆடிட்டராகப் பணியாற்றி வந்தார். அதே வேளையில் என் மகனுக்குத் திருமண வரன் பார்த்து வந்தோம். இந்த நிலையில், சமூக வலைத்தளங்கள் மூலம் விஜி பழனிசாமி எனும் விஜயலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. வெள்ளக்கோவிலைச் சேர்ந்த விஜிக்கு 37 வயதாகிறது. அவருக்கு ஏற்கனவே இன்னொருவருடன் திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். என் மகனுடன் பழகும் சமயத்தில் தனக்கு விவாகரத்து ஆகிவிட்டது எனக் கூறியுள்ளார். ஆதலால், இவர்களின் பழக்கம் காதலாக மாறியுள்ளது. நாளடைவில் விவாகரத்து ஆகவில்லை என்பது தெரிய வந்தது. பின்னர், எங்கள் வீட்டிற்கு ஓய்வுக்கு வந்திருந்தார். அப்போது, தனது திருமண வாழ்க்கை கொடுமையாக இருந்ததாகவும் தனது கணவரை விட்டுப் பிரிந்து வாழ்வதாகவும் கூறினார்.

 

ஆரம்பத்தில் அவர் நடவடிக்கை நன்றாக இருந்தாலும் பின்னர் அவர் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. இதற்கிடையில், விஜி தனது செல்போனில் பல ஆண்களுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதும் அவர்களுடன் ஆபாசமாக இருக்கும் புகைப்படம் மற்றும் உரையாடலைக் கேட்ட என் மகன் சிவா, விஜியை வீட்டை விட்டே வெளியேற்றினார்.  பின்னர், என் மகனிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் பழகினார். ஒருநாள் இருவரும் சேர்ந்து மருதமலை அடிவாரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.  ஆனால், அதன்பிறகும் விஜி தொடர்புகளைத் துண்டிக்காமல் பொய் கூறியதால் மீண்டும் பிரிவு ஏற்பட்டது. என் மகனிடம் பழகும் சமயத்தில் அவர் கடனுக்காகப் பணம் கேட்டு வந்தார். இதைப்போல பல ஆண்களிடமும் பணத்திற்காகப் பழகி வந்தார்.  இதைக் கேட்டால், அரசியல் தொடர்புகளை வைத்து மிரட்டினார். ஆதலால், மன உளைச்சலில் இருந்த என் மகன் கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி விஷம் அருந்தி இறந்துவிட்டார். 

 

என் மகன் இறக்கும் முன் அவரது செல்போனில் 43 ஆடியோ பதிவு செய்து உள்ளார். அதில், தனது இறப்புக்கு விஜி, விஜியின் குடும்பம் மற்றும் அவரது தோழிகளே காரணம் என்று கூறியுள்ளார். ஆதலால், திருமண மோசடி மற்றும் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக விஜி மற்றும் அவருக்கு உதவியாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு சிவா பெற்றோர் அளித்துள்ள புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்