திண்டுக்கல் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டதால், இன்று (08/04/2022) திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம்பட்டியில் சுரபி செவிலியர் பயிற்சிக் கல்லூரி நடத்தி வந்தவர் ஜோதிமுருகன். இவர் அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்து வந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர்.
அதைத் தொடர்ந்து, தாடிக்கொம்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 23- ஆம் தேதி சரணடைந்தார். அதன்பின் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், நவம்பர் 29- ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜோதிமுருகன் பழனி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே ஜோதி முருகன் தரப்பில் ஜாமீன் வழங்கக்கோரி திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் 5- ஆம் தேதி அவருக்கு ஜா மீன் வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மாதர் சங்கம் சார்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜோதிமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து, கடந்த கடந்த மார்ச் மாதம் 22- ஆம் தேதி அன்று உத்தரவிட்டது.
மேலும் மூன்று நாட்களுக்குள் சரணடைய வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் காவல்துறையினர், அவரை கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடைக் கேட்டு ஜோதிமுருகன், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்து, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தி ஏப்ரல் 2- ஆம் தேதி அன்று உத்தரவிட்டது.
மேலும் ஏப்ரல் 8- ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என நிபந்தனை விதித்தது. இந்த நிலையில்தான் திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் சரணடைந்தார்.